புதன், 12 அக்டோபர், 2011

துளிப்பா நாற்பது - பா.சாமி





01.  
கனிந்தும்
கசக்கிறது
முதுமை

02.  
பிடிக்காத சினிமா
விசில் சத்தம் கேட்டது
குக்கரில்

03.
  காட்டில் கூட
கார்த்திகை தீபம்
மின்மினி

04.  
புதைத்துவிட்டேன்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது
விதை

05.  
இவ்வளவு விழுதுகள் இறங்கியும்
நிலைக்காத ஆலமரம்
மேகம்




06. 
இலைக்குக் கீழ்
உணவு பரிமாறும்
வாழை

07.  
உலகெல்லாம்
வளரும் வீடுகள்
வீடின்றி தவிக்கும் பறவை

08.  
யாரிடம் வழக்குரைக்க
இந்த ஓட்டம்
தலையிழந்த கோழி

09.
  காரணம் மறந்தது
காரியம் தொடர்ந்தது
சண்டை

10. 
மின் வெட்டு
தந்தை மகிழ்ந்தார்
டிவியில் ஆபாசம்




11.  
சேர்ந்தன செங்கல்
சிதறியது பூசணி
புது வீடு

12.  
இதற்காகவா தவம்கிடந்து
சிறகு வாங்கினோம்
விட்டில் பூச்சி

13. 
எங்கள் வீட்டில்
வைத்தது வைத்தபடி
மரத்தூண்கள்

14.  
எழுப்புவதற்கு
அலாரம் வைத்தேன்
அதுவும் என்னுடன் தூங்கிவிட்டேன்


15. 
என்ன நோய்
எதற்கு அக்குபஞ்சர்
சப்பாத்திக் கள்ளி




16.  
பின்னப்பட்டது சடை
களைந்தது
மார்டன் ஆர்ட்

17.  
கிணற்றில் நீர் ஊற்றினேன்
உள்ளே ....
காய்கறித் தோட்டம்

18. 
குழி விழுந்தது
அதில் நானும் விழுந்தேன்
அவன் கன்னம்

19.  
விடியலில்
நட்சத்திரம்
வீட்டு வாசலில்

20.
  வேகாத வெயிலில்
வெந்துபோனது
கால்




21.  
வேலியைத் தாண்டி
வந்தது
மல்லிகையின் மணம்


22. 
காறி உமிழ்ந்தேன்
சிரித்தது
கல்லில் பற்பசை நுரை

23.  
பகலில்
தூங்குகிறது
இரவு

24.
  மடியில் கனம் இருந்தது
வழியில் பயம் இல்லை
பசு

25.  
தண்டவாளத்தில்
எதிரும் புதிரும்
எறும்புகள்




26.  
வைகறைப் பொழுதில்
வியர்த்தது
புல்லுக்கு...

27.  
இன்று   ஹோலியோ
சமையலறையில் புகுந்த
பூனைக்கு

28.  
முறிந்து விழுந்த மரத்திலிருந்து
தப்பிப்பறந்த இலைகள்
கிளிகள்


29. 
எப்போது பந்த்
எப்போதுவரும் இடிமழை
பள்ளிச்சிறார்




30. 
வரதட்சணைக் கேட்டவனுக்கு
பிறந்தது
ஐந்தும் பெண்

31. 
கீழே விழுந்து
உடைந்தது கண்ணாடி
அமைதியாய் பூனை

32.  
வேட்டியைப்
போர்வையாக்கியது
தெருக்கூத்து

33. 
கண்ணீர்த்துளியை
துடைத்தன
வியர்வைத் துளிகள்

34. 
இல்லை மனிதன்
இச்சுக்கொட்டியது பல்லி
ஓடி வந்தது நாய்

35.  
கல்லடிக்கு பயந்த
எங்கள் மரம்
காய்ப்பதே இல்லை




36. 
நிலவு
புளிக்கிறது
எட்டாக்கனி ஆனதால்

37.  
கட்டமான கல்
வட்டம் போட்டது
குளத்தில்

38.  
வெட்ட வெட்ட
துளிர்க்கிறது சாதி
மயிர் என்று சொல்லலாமா

39.  
கருவுறாமல்
பிறந்தது
புத்தாண்டு

40.  
கொசுக் கூட்டத்தில்
தொலைந்தது
என் கனவு

 நான் மயிலம் தமிழ்க்கல்லூரியில் பி.லிட் படிக்கும் காலத்தில் தேன்துளி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் ( 2000-2002 ) நடத்தினேன்.அக்காலங்களில் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராய் இருந்த பா.குப்புசாமி அவர்கள் அவ்வப்போது ஐக்கூ கவிதைகள் எழுதியுள்ளார். எளிய மன உணர்வுகளின் வெளிப்பாடான அவற்றை அண்மையில் என் பழைய கையெழுத்துப் பிரதிகளில் கண்டு ரசித்தேன். அதை அப்படியே பதிவு செய்யவேண்டும் என தோன்றியது. இதோ பதிவு செய்துவிட்டேன். இதுவே 07.11.2011 திருமணம் காணவுள்ள அவருக்கு எனது நினைவு பரிசாக அமையட்டும்.

- ஜெ.ரா 

( புகைப்படங்கள்: இரா.செல்வனின் புகைப்பட கருவியில் பனமலையில் என்னால் பதிவு செய்யப்பட்டவை.) 

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இளநிலவன் கவிதைகள்



குயவன்மீது காதல்
   ஏக்கத்தில் அழுகிறது
புதுப்பானை

#
 பாலாற்றில்
   வேகமாய் ஓடுகிறது
   மணல் லாரி

#  
இரவு முழுவதும்
பகற்கொள்ளை
ஆற்றுமணல்